இந்தியாவின் சத்தீசுகரில் மாவட்ட ஆட்சியர் மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்டார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, ஏப்பிரல் 21, 2012

சத்தீஸ்கரில் இருந்து ஏனைய செய்திகள்
இந்தியாவில் சத்தீஸ்கரின் அமைவிடம்

சத்தீஸ்கரின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் என்பவர் இன்று மாவோயிஸ்டுகளினால் கடத்தப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆட்சியரின் மெய்ப்பாதுகாவலர் இருவர் கொல்லப்பட்டனர்.


இன்று பிற்பகல் 4-4:30 மணி அளவில் 15 முதல் 20 வரையான மாவோயிசத் தீவிரவாதிகள் அலெக்ஸ் மேனன் பயணம் செய்த வாகனத்தை மறித்து அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். மாநில அரசின் "கிராம சுவராஜ் அபிஜான்" என்ற வேலைத்திட்டத்தில் பங்கு கொண்டு விட்டு திரும்பி வரும் போதே இவர் கடத்தப்பட்டுள்ளார். 32 வயதுடைய ஆட்சியர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டார்.


மாவோயிசத் தீவிரவாதிகளின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும். கிராம அபிவிருத்தித் திட்டங்களில் திரு. மேனன் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்பவர். நக்சலைட்டுகளினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தவர்களை புனர்வாழ்வளித்து அவர்களை வழமையான வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதற்கு மாநில அரசின் வேலைத்திட்டங்கள் உதவுகின்றன. இவ்வேலைத்திட்டங்களை மாவோயிசவாதிகள் விரும்பவில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


மேனனைக் கடத்தியவர்கள் இதுவரையில் அவர்களது கோரிக்கை என்ன என்பதை அறிவிக்கவில்லை என சத்தீசுகர் மாநில முதல்வர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் தமிழ்நாடு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ.,முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது.


மேனன் கடத்தப்பட்ட அதே பகுதியில் சென்ற மாதம் மாநில ஆளும் கட்சி பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜீனா இக்காக்கா என்பவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவரை விடுவிப்பதற்கு தமது 29 கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் கோரியிருக்கின்றனர். இந்த 29 பேரில் 8 மாவோயிஸ்டுகள் உட்பட 25 பேரை மட்டும் விடுவிப்பதற்கு மாநில அரசு இணங்கியுள்ளது.


மூலம்

தொகு