இந்திய மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்

வெள்ளி, மே 4, 2012

சத்தீஸ்கரில் இருந்து ஏனைய செய்திகள்
இந்தியாவில் சத்தீஸ்கரின் அமைவிடம்

சத்தீஸ்கரின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இந்தியாவின் சத்தீசுக்கர் மாநிலத்தில் 12 நாட்களுக்கு முன்னர் மாவோயிசத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார்.


ஏப்ரல் 21 ஆம் நாள் கடத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் மேனன் நேற்று மத்தியஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட மேனன் ஊடகவியலாளர்களிடம் உரையாடிய போது, தனக்காக மத்தியஸ்தம் செய்த இரு தரப்பினருக்கும், இந்திய அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். "நான் இப்போது மிகவும் களைப்பாயிருக்கிறேன். வீட்டுக்குச் சென்று இளைப்பாற வேண்டும்," என அவர் தெரிவித்தார்.


மாவோயிசவாதிகளாலும் பழங்குடியினத்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உடனடியாக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என மத்தியத்தர்கள் எஸ்.டி. சர்மா, மற்றும் பேராசிரியர் ஜி. அர்கோபால் ஆகியோர் தெரிவித்தனர்.


சத்தீஸ்கர் மாநில முதல்- மந்திரி ராமன் சிங் தற்போது முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள தில்லி சென்றுள்ளார். அவர் ராய்ப்பூர் திரும்பியதும் அவரை சந்தித்து பேச அலெக்ஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், சுக்மா மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார் என சத்தீசுக்கர் மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தாண்டேவாடா ஆட்சியர் ஓ.பி.சவுத்ரி கூடுதல் பொறுப்பாக சுக்மா மாவட்ட நிர்வாகத்தை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகள் மற்றும் வறிய பழங்குடியின மக்களுக்காக தாம் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களால், தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆட்கடத்தல்களில், இந்தக் கடத்தல் கடைசியாக நடந்ததாகும்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு