ஆத்திரேலியப் பாதிரியாரின் படுகொலை: ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

வெள்ளி, சனவரி 21, 2011

1999 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவைச் சேர்ந்த கிறித்தவப் பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் உயிருடன் எரித்துக் கொலை செய்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட தாரா சிங் என்பவரின் ஆயுள் தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.


தாராசிங் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என நடுவண் அரசு வழக்குத்தொடுநர்கள் வாதாடினர். உள்ளூர் நீதிமன்றம் முதலில் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.


ஆத்திரேலியப் பாதிரியாரான கிரகாம் ஸ்டெய்ன்ஸ் ஒரிசாவில் உள்ள கியோன்கர் நகரில் தனது மனைவி மற்றும் 8 மற்றும் 10 வயது நிறைந்த இரண்டு மகன்களுடன் 30 ஆண்டுகளாக ஒரிசாவில் தொழுநோயாளிக்காக சேவை செய்து வாழ்ந்தவர். ஸ்டெய்ன்ஸ் தனது இரு மகன்களுடன் 1999 டிசம்பர் மாதத்தில் தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் இரவில் தனது வாகனத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு வன்முறைக் கும்பல் அவரது வாகனத்தைத் தீ வைத்து எரித்தனர். இதன்போது மூவரும் உயிரிழந்தனர்.


ஏழை இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்துக்கு இப்பாதிரியார் மதம் மாற்றுவதாக கடுமைவாத இந்துக்கள் இவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.


இரண்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் வழக்குத்தொடுநர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மரணதண்டனை வழங்குவதற்கு தாராசிங் மீதான வழக்கு ”அபூர்வமானவற்றுள் அபூர்வமானது” அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.


"ஒரு மதம் ஏனைய மதத்தை விட உயர்ந்தது என்பதோ, அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதோ, அல்லது ஒருவரின் நம்பிக்கையில் கட்டாயமாகத் தலையிடல் போன்றவற்றிற்கு நியாயம் கற்பிக்க முடியாது," என நீதிபதிகள் தெரிவித்தனர்.


பஜ்ராங் தள் என்ற இந்து தீவிரவாதக் குழுவே இத்தாக்குதலுக்குக் காரணம் என கிறித்தவ சமூகத் தலைவர்கள் நம்புகின்றனர். ஆனாலும் எக்குழுவும் சம்பந்தப்பட்டுள்ளன ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.


நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டிருந்த இவ்வழக்கில் 2003 ஆம் ஆண்டில் தாராசிங் உட்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஒரிசா உயர் நீதிமன்றம் தாராசிங்கின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தது. அத்துடன் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட ஏனைய 11 பேரையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமையால் விடுதலை செய்தது.


மூலம் தொகு