ஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு
செவ்வாய், மே 10, 2011
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
ஒசாமா பின் லாடனை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியதே அமெரிக்கா. அதை அந்த நாடு மறந்து விட்டதா என்று பாக்கித்தான் பிரதமர் யூசப் ரசா கிலானி கேள்வி எழுப்பியுள்ளார் இது குறித்து பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் அல்-கைடா தலைவரான பின் லாடனின் வளர்ச்சிக்கு யார் காரணம்? மற்றவர்களின் தவறுக்காக, எங்களது கொள்கைகளை தவறு என்று யாரும் கூற முடியாது. அல்-கைடா பிறந்த இடம் பாக்கித்தான் அல்ல. நாங்கள் பாக்கித்தானுக்கு வருமாறு பின் லாடனை அழைக்கவில்லை. ஆப்கானித்தானும் அழைக்கவில்லை. அவர் எப்படி இந்தப் பிராந்தியத்திற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். வரலாறு தெரிவிக்கும். உலக அளவிலான உளவுத் தோல்வியே பின் லாடனின் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அதேசமயம், ஐஎஸ்ஐ மற்றும் பாக்கித்தான் இராணுவம் ஆகியவை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும், பூசலும் இல்லை என்றார்.
அதே நேரம் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஒசாமா பாக்கித்தானில் தங்கியிருக்க உதவியவர்கள், அந்நாட்டுக்குள் இருக்கின்றனரா அல்லது வெளியில் உள்ளனரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் விசாரிக்க வேண்டியுள்ளது. பாக்கித்தானில் ஒசாமாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒசாமாவுக்கு உதவியது யார் என்பதை கண்டுபிடிப்பதிலும், விசாரிப்பதிலும் தாங்களும் ஆர்வமாக இருப்பதாக பாக். அரசு கூறியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகலாம். 2001 செப் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து பாக்கித்தான் செயல்பட்டு வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அவையனைத்தும் உண்மை; இன்றும் தொடர்கின்றன. அதே நேரம், பாக்கித்தான் மண்ணில் உள்ள சில பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு அந்நாட்டு அரசின் ஒத்துழைப்பும் வேண்டியுள்ளது. அங்கு அமெரிக்காவுக்கு எதிரான ஆழமான மனநிலை இருக்கிறது. அதனால், அங்கு அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது சிறிது கடினம் தான் என்று தெரிவித்திருந்தார்.
மூலம்
தொகு- ஒசாமாவை உருவாக்கியது அமெரிக்காதானே-பாக். பிரதமர் கிலானி நக்கல், தட்ஸ்தமிழ், மே 10, 2011
- பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு, தினமலர், மே 10, 2011