ஐரோப்பாவின் மிக உயரமான வானளாவி லண்டனில் திறந்து வைக்கப்பட்டது
வெள்ளி, சூலை 6, 2012
- 3 மார்ச்சு 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
- 15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
லண்டனில் அமைக்கப்பட்டுள்ள ஐரோப்பாவின் மிக உயரமான வானளாவி நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. லேசர் ஒளியுடன் கூடிய வண்ண விளக்குகள் இவ்வானளாவியை அலங்கரித்தன.
த சார்டு (the Shard) என அழைக்கப்படும் இந்த வானளாவி, ஒழுங்கற்ற பிரமிது வடிவில் முழுவதுமாகக் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது. பிரபலமான லண்டன் பாலத்திற்கு அருகாமையில் தேம்சு ஆற்றுக் கரையில் அமைந்துள்ள இதன் உயரம் நில மட்டத்தில் இருந்து 309.6 மீட்டர்கள் (1,016 அடி) ஆகும்.
87-அடுக்குகளைக் கொண்ட இக்கோபுரத்தில் வணிக அலுவலகங்கள், தனிப்பட்ட சில மனைகள், ஒரு ஆடம்பர உணவு விடுதி, உணவு சாலைகள், மற்றும் காட்சிச் சாலை ஆகியன உள்ளடங்கியுள்ளன. இதன் உள் வேலைகள் 2013 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானளாவியில் 44 மின்தூக்கிகள் இயங்குகின்றன. இதன் 69 ஆம் மாடியில் இருந்து லண்டன் முழுவதையும் பார்க்கக்கூடியதாகக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிக் கூடத்திற்குச் செல்வதற்கு 25 பிரித்தானியப் பவுண்டுகள் அறவிடப்படும்.
இந்த வானளாவியை 200 ஆம் ஆண்டில் இத்தாலிய கட்டிடக் கலைஞர் வரைந்திருந்தார். இவரே பாரிசின் புகழ் பெற்ற பொம்பிடோ மையத்தை அமைத்திருந்தார்.
நிதிப் பற்றாக்குறையால் கட்டட நிர்மாணப் பணி 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கட்டார் முதலீட்டாளர்கள் சிலரின் முயற்சியால் கட்டிடப் பணி 2009 ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கட்டார் முதலீட்டாளர்கள் இந்த வானளாவிக்கான 80% பங்குகளைத் தம் வசம் வைத்துள்ளனர்.
இதன் அமைவிடம் குறித்தும், கட்டிட அமைப்புக் குறித்தும் விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், பிக் பென், புனித பவுலின் தேவாலயம், லண்டனின் கண் போன்ற கட்டடங்களுடன் இந்த வானளாவியும் பிரித்தானியத் தலைநகரின் குறிப்பிடத்தக்க சின்னமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்
தொகு- Britain Unveils Europe’s Tallest Building, ரியாநோவஸ்தி, சூலை 6, 2012
- Flying high: Laser show lights up the sky in London as The Shard is officially unveiled, டெய்லிமெயில், சூலை 6, 2012