எத்தியோப்பியப் பிரதமர் மெலெசு செனாவி காலமானார்

செவ்வாய், ஆகத்து 21, 2012

எத்தியோப்பியாவின் பிரதமர் மெலெசு செனாவி தனது 57 வது அகவையில் "வெளிநாடு" ஒன்றின் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என அந்நாட்டு அரசு இன்று அரசுத் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளது.


பிரதமர் மெலெசு செனாவி

மேலதிக தகவல்கள் எதுவும் தரப்படாத போதிலும், செனாவி பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் காலமானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். எத்தியோப்பியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும், பிரதிப் பிரதமருமான ஐலு மரியாம் தெசாலென் பதில் பிரதமாராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


பிரதமர் செனாவி பல வாரங்களாக பொதுவில் நடமாடாத நிலையில், கடந்த மாதம் தலைநகர் அடிசு அபாபாவில் இடம்பெற்ற உச்சி மாநாடொன்றில் இவர் கலந்து கொள்ளாததால் அவரது உடல்நலம் குறித்து பல வதந்திகள் உலவி வந்தன.


மெலெசு செனாவி 1991 ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத் சார்பு தலைவர் மெங்கிஸ்து ஐலு மரியாமை பதவியில் இருந்து அகற்றி நாட்டின் சனாதிபதி ஆனார். எத்தியோப்பியாவின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெரிதும் உழைத்தவர் என இவர் போற்றப்படுகிறார். ஆனாலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் இவரது அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளன.


பல ஆண்டுகளாக கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடியவர் செனாவி. "ஆப்பிரிக்காவின் பேச்சாளர்" எனக் கூறிய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன், வறுமையில் இருந்து பல மில்லியன் மக்களைக் காப்பாற்றியவர் எனக் கூறினார். "கடந்த 2 மாதங்களாக வெளிநாடு ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நமது பிரதமர், திடீர் சுகவீனமடைந்து நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 23:40 மணிக்குக் காலமானார்," அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.


எரித்திரியா நாடு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டிருந்தாலும், எத்தியோப்பியாவின் பொருளாதாரம் பெருமளவு வளர்ச்சி கண்டிருந்தது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். மெலெசின் தலைமையிலான அரசு அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணி வந்தது. அந்நாட்டில் இருந்து பெருமளவு நிதியை கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தளம் ஒன்றையும் அது கொண்டுள்ளது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது படைகளை அங்கு அனுப்பியிருந்தது.


2005 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் குறைந்தது 200 பேர் வரை கொல்லப்பட்டனர். பெருமளவு ஊடகவியலாளர்கள், மற்றும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர்.


மூலம்

தொகு