எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத புதிய கிருமி பரவுவதாக எச்சரிக்கை

வெள்ளி, ஆகத்து 13, 2010


எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத புதிய கிருமி ஒன்று இந்தியா, பாகித்தான் போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.


அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற நோயாளிகளுடன் இக்கிருமி பிரித்தானியாவுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இதுவரை சுமார் 50 பேரிடம் இக்கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கிருமி அமெரிக்கா, ஆத்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்குளும் வந்துள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் பாதிப்பு உலகெங்கிலும் பரவும் என்று அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.


மனிதர்களின் குடலில் காணப்படுகின்ற இந்தக் கிருமி NDM-1 (New Delhi metallo-beta-lactamase) என்ற நுண்மத்தை உருவாக்கக் கூடியது. இக்கிருமி தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று "த லாண்செட்" என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் சக்திமிகுந்த “கார்பனம்ஸ்” வகை நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளால் கூட இக்கிருமியை அழிக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உலகளாவிய கண்காணிப்பும் நடவடிக்கையும் தேவை என பிரித்தானியாவில் உள்ள அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தக் கிருமி சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் கார்த்திகேயன் குமாரசாமி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில், பல மனிதர்களின் உடலில் இயல்பாகக் காணப்படும் ஈ.கோலி போன்ற பாக்டீரியாவே மரபணு மாற்றங்களை அடைந்து மருந்துகளுக்குக் கட்டுப்படாத வகையிலான கிருமியாக மாறியுள்ளது என்று விளக்கினார்.

மூலம் தொகு