எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு

புதன், திசம்பர் 15, 2010

ஆட்கொல்லி நோயான எயிட்சைத் தோற்றுவிக்கும் எச்.ஐ.வி தீ நுண்மத்திற்கு எதிரான வைத்தியத்தை கண்டுபிடித்துள்ளதாக செருமனியின் பெர்லின் நகரில் இருக்கும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி பிரச்சினை உள்ள ஒரு நபரில் நடந்த சோதனை மூலம் இதை இவர்கள் அறிந்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.


எயிட்சைக் குறிக்கும் சிவப்புப் பட்டி

44 வயது டிமத்தி பிறவுன் என்ற அமெரிக்க நோயாளி இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் செருமனியில் இதற்கான சிகிச்சையைப் பெறச் சென்றார். அங்கு அவருக்கு குருத்தணு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் 20 மாதத்துக்கு எச்.ஐ.வி கிருமி இவரது உடலைத் தாக்கவில்லை என பெப்ரவரி 2009 இல் இவரது மருத்துவர்கள் அறிவித்தனர்.


பிரவுனின் உயிரணு எண்ணிக்கை எச்.ஐ.வி இல்லாதோரின் எண்ணிக்கை அளவே கடந்த மூன்றரை ஆண்டுகளாக உள்ளதாக இவ்வாரம் வெளியான பிளட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இவரது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.


"இந்த நோயாளியின் எச்.ஐ.வி முற்றாகக் குணமடைந்து விட்டதாக நாம் முடிவு செய்துள்ளோம்," என அவர்கள் எழுதியுள்ளனர். இரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் அவரிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹாவார்ட், மயாமி பல்கலைக்கழக அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த செய்தி மிகவும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கின்றது ஆனாலும் முழுமையான தீர்வாக இருக்குமா என்பதில் ஐயப்பாடு எழுப்பியுள்ளனர்.


மூலம் தொகு