எசுப்பானிய பாஸ்க் போராளிகள் 43 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டனர்

வெள்ளி, அக்டோபர் 21, 2011

எசுப்பானியப் பாஸ்க் போராளிகள் அமைப்பு "ஏட்டா" (ETA) தமது 43-ஆண்டு கால தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. எசுப்பானியா, மற்றும் பிரான்சுடன் தாம் பேச்சுக்களை ஆரம்பிக்க விரும்புவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பின் மூலம் ஐரோப்பாவின் கடைசி ஆயுதம் தாங்கிய தீவிரவாதம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாஸ்க் நாடு

பாஸ்க் போராளிகளின் இவ்வறிவிப்பை வரவேற்றிருக்கும் எசுப்பானியப் பிரதமர் ஓசே சப்பாட்டெரோ, "சனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி," எனக் கூறியுள்ளார்.


பாஸ்க் போராளிகள் இதற்கு முன்னரும் பல தடவை இவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவித்து அதனைப் பல முறை மீறியுள்ளதால், அரசியல்வாதிகள் இவர்களின் உறுதி மொழிகளைப் பொதுவாக நம்புவதில்லை. அரசும் இவர்களின் அறிவிப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. ஆனாலும், இம்முறை இவ்வறிவிப்பு வித்தியாசமானதாக இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். ஏட்டா போராளிகள் அமைதி முறைக்கு தமது போராட்டத்தைக் கொண்டு செல்லவிருப்பதாக நேற்ரைய அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.


மூன்று ஏட்டா போராளிகள் தமது வழமையான பாஸ்க் தொப்பி, மற்றும் வெள்ளை முகமூடி அணிந்த வண்ணம் தோன்றி இந்த அறிவிப்பை விடுத்திருந்தனர்.


பாஸ்க் மக்களின் போராட்டம் குறித்த பன்னாட்டு மாநாடு ஒன்று இவ்வாரம் பாஸ்க் நாட்டில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனான், மற்றும் வடக்கு அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களில் கலந்து கொண்ட முக்கியத்தர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். ஏட்டா உடனடியாக ஆயுதங்களைக் களைய வேண்டும் என அம்மாநாட்டில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.


நவம்பர் மாதத்தில் எசுப்பானியாவில் பொதுத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதனால் புதிய அரசாங்கம் ஏட்டா போராளிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டி இருக்கும் என சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அல்ஃபிரெடோ பெரெசு ருபல்காபா தெரிவித்தார். திரு. சப்பாட்டேரோ இம்முறைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை.


அப்போதைய எசுப்பானிய சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ வடக்கு எசுப்பானியாவிலும், பிரான்சின் தென்மேற்கிலும் வாழும் பாஸ்க் இனத்தவர்களின் மொழி மற்றும் அவர்களின் விடுதலைக்கான எந்தவொரு வழியினையும் முடக்கியதை அடுத்து பாஸ்குகளின் தனிநாட்டுக்கான போராட்டம் ஆரம்பமாகியது. 1960களின் இறுதியில் இருந்து போராடி வரும் ஏட்டா அமைப்பின் தாக்குதல்களில் இது வரையில் 829 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு