சிப்ரால்ட்டர் தொடர்பில் எசுப்பானியாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் முறுகல்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஆகத்து 5, 2013

சிப்ரால்ட்டர் தொடர்பில் எசுப்பானியாவுடனான சர்ச்சைகள் பேசித் தீர்க்கப்படும் என ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.


எசுப்பானியா-சிப்ரால்ட்டர் எல்லையில் சோதனைக் கெடுபிடிகளை எசுப்பானியா கடந்த வார இறுதியில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை பிரித்தானியா வெளியிட்டுள்ளது. எல்லையைக் கடப்பவர்களிடம் இருந்து ஆளுக்கு 50 யூரோக்களை அறவிட எசுப்பானிய திட்டமிட்டுள்ளதென நேற்று அந்நாடு அறிவித்திருந்தது. சிப்ரால்ட்டர் நாட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் எசுப்பானியாவில் வேலைக்காக அங்கு சென்று வருகின்றனர். பணம் அறவிடும் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என சிப்ரால்ட்டர் கூறுகிறது.


இப்புதிய திட்டங்கள் குறித்து தமக்கு எசுப்பானிய விளக்கம் தர வேண்டும் என ஐக்கிய இராச்சியம் அறிவுறுத்தியுள்ளது.


சிப்ரால்ட்டர் கடந்த 300 ஆண்டு காலமாக பிரித்தானியாவின் ஆட்சியில் உள்ளது. ஆனாலும், ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சி உரிமை தொடர்பாக எசுப்பானியா கருத்து வேறுபாடு கொண்டுள்ளது. சிப்ரால்ட்டர் மத்திய தரைக் கடல் பகுதியில் ஐபீரிய நீரிணையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் எசுப்பானியா உள்ளது. பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது, தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது.


சிப்ரால்ட்டர் அண்மையில் தனது கடற்பரப்பில் செயற்கையான கடலடிப் பாறை ஒன்றை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்திருந்ததை அடுத்தே இந்த சர்ச்சை ஆரம்பித்தது. தனது நாட்டு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை இத்திட்டம் மீறுவதாக எசுப்பானியா கூறுகிறது.


மூலம்

தொகு