2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி

சனி, சூன் 14, 2014

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா, நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் எசுப்பானிய கால்பந்து அணி இது போன்ற தோல்வியைத் தழுவியது கிடையாது.


இப்போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் எசுப்பானிய வீரர் அல்போன்சோ தண்ட உதை முறையில் ஒரு கோல் அடித்தார். பின்னர் நெதர்லாந்து அணியின் வான் பெர்சீ ஒரு கோலடிக்க இடைவேளை வரை இரு அணிகளும் 1-1 எனும் நிலையில் இருந்தன.


இடைவேளைக்குப் பின்னர் மழையும் தொடங்கியது. 53 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ரோபென், 64 நிமிடத்தில் டி வெர்ஜ் ஆகியோர் கோல்கள் போட்டனர், 72 ஆவது நிமிடத்தில் வான் பெர்சி மேலும் ஒரு கோலை அடித்தார். இறுதியாக ரோபென் நெதர்லாந்துக்காக தனது இரண்டாவது கோலை 79 ஆவது நிமிடத்தில் அடித்ததை அடுத்து எசுப்பானியா 1-5 எனும் தோல்வியைத் தழுவியது.


அடுத்த கட்டத்துக்கு முன்னேற குழு நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் எசுப்பானியா வெற்றி பெற வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.


முன்பு 1950 ஆம் ஆண்டு பிரேசிலிடம் 6-1 என்ற கோல் கணக்கிலும், 1963 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணியிடம் 6-2 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெயின் கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது.


மூலம் தொகு