எட்டா போராளிகளின் இராணுவத் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பிரான்சில் கைது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், மே 20, 2010

”எட்டா” என்ற பாஸ்க் தீவிரவாதக் குழுவின் இராணுவத் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உட்பட நான்கு தீவிரவாதிகளைத் தாம் கைது செய்துள்ளதாக பிரெஞ்சுக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


நான்கு சந்தேக நபர்களும் இன்று அதிகாலையில் பிரான்சின் தெற்கு நகரான பயோனியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். இவர்களினல் எட்டாவின் தற்போதைய இராணுவத் தலைவர் மிக்கேல் கபிக்கோயிட்ஸ் கரேரா சரோபியும் அடங்குவார்.


பிரான்சைத் தளமாகக் கொண்டு இக்குழு இயங்குவதாகவும், கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பிரான்சில் ஐந்து எட்டா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த பெப்ரவரியில் இக்குழுவின் இராணுவத் தலைவர் ஐபோன் கொகியச்சோச்சியா என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இசுப்பானியரான மிக்கேல் கரேரா சரோபி இராணுவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இவ்வாண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சுக் காவல்துறை அதிகாரி ஒருவரை பாரிசில் வைத்துக் கொலை செய்ய்யப்பட்டமைக்கு எட்டா அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இக்கொலையில் மிக்கேல் சரோபி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கலாம் இப்போது நம்பப்படுகிறது.


பிரான்சில் இயங்கும் எட்டா தளங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சார்க்கோசி தெரிவித்துள்ளார்.


எட்டா அமைப்பு ஸ்பெயினில் பாஸ்க் இனத்தவருக்காக தனிநாடு கேட்டு கடந்த 41 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. இக்காலப் பகுதியில் 820 இற்கும் அதிகமானோரின் உயிரிழப்புகளுக்கு இவ்வமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மார்ச் 2006 ஆம் ஆண்டில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும், அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் உடன்பாடு முறிவடைந்தது.

மூலம்

தொகு