உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: புலனாய்வு ஆவணங்களைத் தருவதற்கு இத்தாலி நீதிமன்றம் மறுப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, பெப்பிரவரி 17, 2013

புலனாய்வு ஆவணங்களைத் தர வேண்டி இந்தியா விடுத்த வேண்டுகோளை, உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழலை விசாரித்துவரும் இத்தாலிய நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது; "இத்தகவல்கள், இரகசியமாக காக்கப்பட வேண்டியவை" என காரணம் கூறப்பட்டுள்ளது.


உறுதியான தகவல்களையும் ஆவணங்களையும் பெறும்பொருட்டு கடந்த 13 ஆம் திகதியன்று ரோமில் உள்ள இந்தியத் தூதரகம், இத்தாலி நாட்டு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்து இத்தாலிய நீதிமன்றம் நேற்று அனுப்பிய கடிதமொன்றில் "நேர்முறையான பதிலைத் தர இயலவில்லை" எனக் குறிப்பிட்டது.


அக்கடிதத்தில் மேலும் "புலனாய்வு ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இத்தருணத்தில், சட்ட விதி 329 இன்படி அனைத்துத் தகவல்களும் இரகசியமானவையாகும்; வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வழக்குரைஞர்களுக்கு மட்டுமே ஆவணங்களை வழங்க முடியும். இரகசிய நடைமுறைகள் முடிவடைந்தபிறகு, இந்தியாவிடமிருந்து புதிய கோரிக்கை வருமானால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்" எனவும் கூறப்பட்டுள்ளது.


வணிகப் பரிவர்த்தனையின்போது இந்திய நிறுவனத்துக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கோ கையூட்டு தரப்பட்டுள்ளதா என்று இந்தியா முன்னதாகக் கேட்டிருந்தது. விதிமுறைகளை மீறியிருந்தால் ‘வணிக உடன்படிக்கை இரத்து, செலுத்திய பணத்தைத் திரும்பப்பெறல், கறுப்புப்பட்டியலில் சேர்த்தல், சட்டபூர்வமான நடவடிக்கை’ போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.


மூலம்

தொகு