உருசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து கிரிமிய மக்கள் பெருமளவு வாக்களிப்பு

திங்கள், மார்ச்சு 17, 2014

உக்ரைனின் தன்ன் ஆட்சிக் குடியரசான கிரிமியா உக்ரைனிடம் இருந்து விடுதலையை அறிவித்து, உருசியக் கூட்டமைப்பில் இணைய முறைப்படி விண்ணப்பித்துக் கொண்டது.


கிரிமியா மேலதிக சுயாட்சி அதிகாரத்துடன் உக்ரைனுக்குள்ளேயே நீடிக்க வேண்டுமா அல்லது உருசியாவுடன் இணைய வேண்டுமா என கிரிமியாவின் இருபது லட்சம் குடிமக்களிடம் கருத்துக் கேட்டு நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பின் படி, 97% மக்கள் உருசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை கிரிமிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றின் படி, உக்ரைனிய சட்டம் அப்பகுதியில் செல்லாது என்றும், உக்ரைனிய அரசுக்குச் சொந்தமான அனைத்தும் கிரிமியாவுக்கு உரியது என்றும் கூறப்பட்டுள்ளது.


இம்முடிவுகளை உக்ரைனிய அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இவ்வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், மாஸ்கோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளன.


கடந்த பெப்ரவரி மாதம் முதல் கிரிமியா உருசிய-ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இப்படையினர் உருசிய ஆதரவு தற்காப்புப் படையினர் எனவும், தமது நேரடிக் கட்டுப்பாட்டில் அவை இல்லை என்றும் உருசியா தெரிவித்துள்ளது.


கடந்த பெப்ரவரி 22 இல் உக்ரைனின் மாஸ்கோ-ஆதரவு அரசுத் தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, உருசியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரிமியாவை உருசிய ஆதரவுப் படைகள் கைப்பற்றின.


மூலம் தொகு