ஈழப் போர்க்குற்றங்கள் குறித்த நிபுணர் குழு அறிக்கை ஐநா மனிதஉரிமைப் பேரவைக்கு அனுப்பப்பட்டது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், செப்டெம்பர் 13, 2011

இல்ங்கையில் நான்காம் ஈழப்போர் முடிவில் இலங்கைப் படையினர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொலைசெய்ததாக குற்றம் சுமத்தும் நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.


இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு தன்னால் உத்தரவிட முடியாதெனக் கூறிய பான் கி மூன், மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புக்கள் இதனை மேற்கொள்ளமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகருக்கும் இவ்வறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்க்கி தெரிவித்துள்ளார். பன்னாட்டு விசாரணை தேவை என பான் கி மூன் மனித உரிமைப் பேரவையைக் கேட்டுக்கொள்ளவில்லை என நெசிர்க்கி தெரிவித்துள்ளார்.


2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற மோதலின்போது இலங்கைப் படையினர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றதாக பான் கி மூனினால் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கூறியது. இருப்பினும் இரு தரப்பினரும் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாமெனவும் அக்குழு தெரிவித்திருந்தது. போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது.


இதற்கிடையில், பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையை உதாரணம் காட்டி ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். ஜெனிவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் 18வது அமர்வில் உரையாற்றிய போதே நவநீதம் பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.


ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை இப்போது மனித உரிமைகள் பேரவைக்கு அஞுப்பப்பட்டிருப்பது தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பேரவை அமர்வில் கலந்து கொண்ட இலங்கைக் குழுவின் தலைவர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.


தருஸ்மன் அறிக்கை எனக் கூறப்படும் நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும் நியூயோர்க்கில் கூடவிருக்கும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திலும் இலங்கை அரசு கடுமையாக எதிர்க்கும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நடுநிலைமை விவகாரம் குறித்தும் நியூயோர்க்கில் இலங்கைத் தூதுக்குழுவினர் பேசுவர் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு