இலங்கையின் போர்க்குற்றங்களை ஆராய ஐநா நிபுணர் குழு நியமனம்

புதன், சூன் 23, 2010


இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட ஈழப்போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மூன்று பேர் அடங்கிய பன்னாட்டு நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ளதாக ஐநாவின் பேச்சாளர் செயலாளர் மார்ட்டின் நெசிர்க்கி நெற்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.


இக்குழுவிற்கு இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மார்சுக்கி டாருஸ்மன் தலைமை வகிப்பார். அவருக்கு உதவியாக தென்னாபிரிக்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் பணியாற்றுவர்.


டாருஸ்மன் வட கொரியாவின் மனித உரிமைகளை ஆராயவென சிறப்புப் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகளால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தார். சட்டத்தரணி ஸ்டீவன் ரட்னர் முன்னர் கம்போடியாவில் கெமர் ரூச் அரசை எப்படி நீதிக்கு முன் நிறுத்துவது என்பது குறித்து ஐக்கிய நாடுகளுக்கு ஆலோசனை தந்தவர்.


இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.


இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது என தெரிவித்துள்ள பேச்சாளர், செயலாளருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை இதற்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.


"இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரிக்கப் பின்னடிக்கும் நிலையில் இப்படியான நிபுணர் குழு அவசியம் தேவை," என அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் பெகி ஹிக்ஸ் தெரிவித்தார். இந்த நிபுணர் குழு இலங்கைக்கு எதிரான பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இதற்கிடையில், நிபுணர்கள் குழு நியமனத்திற்கு இலங்கை தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறைமையுடைய நாட்டின் விவகாரங்களில் தலையிடுவது தேவையற்ற விடயம்," என்று குறிப்பிட்டார்.


இலங்கை பலம் வாய்ந்த சுதந்திரமான நீதித்துறையுடைய ஒரு நாடு என்பதுடன், பரீட்சித்துப் பார்க்கப்பட்ட நீதி நிர்வாக அமைப்புக்கள் உள்ள ஒரு நாடு எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

மூலம்

தொகு