இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழு அறிக்கை கையளிக்கப்பட்டது

புதன், ஏப்பிரல் 13, 2011

இலங்கையின் இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை பான் கி மூனிடம் கையளிக்கப்பட்டதாக ஐநா செயலாளரின் பிரதி தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.


ஐநா செயலர் பான் கிமூன்

இந்த அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு முன்பாக மரியாதை நிமித்தம் இலங்கை அரசிடமும் ஒரு பிரதியை கையளிப்பது தொடர்பாக பான் கி மூன் ஆலோசித்து வருவதாக பர்ஹான் ஹக் தெரிவித்தார். இந்த அறிக்கையினை பான் கி மூன் ஆழமாக படித்து அதன்பின்னர் இவ்வறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பார்.


2009ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக எழுந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்கும்படி கடந்த 2010 சூன் மாதம் மூன்றுபேர் கொண்ட ஆலோசனை குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் நியமித்திருந்தார். இக்குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூக்கி தருஸ்மான், தென்னாப்பிரிக்காவின் யஸ்மின் சூக்கா, ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டீவன் ரட்ணர் ஆகியோர் அங்கம் வகித்தனர்.


மே 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்டப் போர் முடிவடைந்த சில நாட்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பான் கி மூன் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுடனான உடன்பாட்டை அடுத்து இந்த நிபுணர் குழு நிறுவப்பட்டது. நிபுணர் குழு 2010 செப்டம்பரில் தமது பணியை ஆரம்பித்திருந்தது.


இதற்கிடையில், ஐநா நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று பன்னாட்டு மன்னிப்பு அவை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத்தக்கதான அமைதிச் சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மன்னிப்பு அவையின் ஆசிய - பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி மேற்குறித்தவாறான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழருக்குத் தனி நாடு கோரிப் போரிட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசுப் படைகள் 2009 மே மாதத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் வெற்றி கண்டது. இறுதிக் கட்டப் போரில் 70,000 இற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு