ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்

ஞாயிறு, சூலை 27, 2014

கடந்த ஒரு மாத காலமாக ஆத்திரேலியக் கடற்பரப்பில் ஓசன் புரொட்டெக்டர் என்ற ஆத்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 ஈழத்தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் கொக்கோசுத் தீவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வேறு இடங்களுக்கு மூன்று விமானங்களில் எடுத்துச் செல்லப்பட்டனர்.


கொக்கோசுத் தீவில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏர் நவூரு போயிங் 737 விமானம் மூலம் இன்று நண்பகல் அளவில் அங்கிருந்து புறப்பட்டது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என அறியப்படாவிட்டாலும், மேற்கு ஆத்திரேலியாவின் கேர்ட்டின் தடுப்பு முகாம் நோக்கி இவ்விமானம் சென்றதாக கொக்கோசுத் தீவின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரு விமானங்களும் மீதமானோரைக் கொண்டு சென்றுள்ளது.


குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வரிசையாக கப்பலில் இருந்து இறக்கப்பட்டதை த கார்டியன் பத்திரிகை காணொளிச் செய்தியொன்றைத் தந்துள்ளது. இவர்கள் வெளியேறிச் சென்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் வரிசையாக நின்றிருந்தனர்.


இந்தியாவில் இருந்து 157 பேருடன் சூன் மாதத்தில் புறப்பட்ட படகு ஆத்திரேலியக் கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் சூலை ஆரம்பத்தில் ஆத்திரேலிய கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதே காலப்பகுதியில் இலங்கையில் இருந்து 54 பேருடன் வந்த படகொன்று கிறித்துமசுத் தீவருகில் வழிமறிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.


மூலம்

தொகு