இளவரசர் வில்லியம் திருமணம் கோலாகலமாக நடந்தது
சனி, ஏப்பிரல் 30, 2011
- 3 மார்ச்சு 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
- 15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
பிரித்தானியாவின் முடிக்குரிய 2வது வாரிசான இளவரசர் வில்லியமுக்கும் அவரது நீண்ட நாள் காதலி கேட் மிடில்டனுக்கும் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இத்திருமணைத்தை நேரடியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் உலகெங்கும் இருந்து 2 பில்லியன் மக்கள் கண்டு களித்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. எறத்தாழ இராண்டாயிரம் பேர் திருமணம் நடந்த தேவாலயத்துக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நூற்றாண்டின் பிரபலமான திருமணமாக இது கருதப்படுகிறது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத், வில்லியமின் தந்தை இளவரசர் சார்லஸ்- கமிலா மற்றும் அரச குடும்பத்தினர், பிரபலங்களின் முன்னிலையில் நடந்த இத்திருமணச் சடங்கில் இங்கிலாந்தின் கேண்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ் அவர்கள் வில்லியம் - கேட் சோடியை கணவன் மனைவியாக அறிவித்தார். திருமணத்தை அடுத்து இளவரசர் வில்லியத்துக்கு கேம்பிரிட்ச் கோமகன் (டியூக் ஒஃப் கேம்பிரிஜ்) என்ற பட்டமும், கேட் மிடில்டனுக்கு கேம்பிரிட்ச் சீமாட்டி (டச்சஸ் ஒஃப் கேம்பிரிஜ்) என்ற பட்டமும் மகாராணியாரால் வழங்கப்பட்டது.
பிரித்தானிய நேரம் 11 மணிக்கு தேவாலயத்தில் வந்திறங்கினார் மணமகள் கேட். மணமகளைப் பார்த்தவுடன் வழியிலிருந்தவர்களும், வீதியின் இரு மருங்கிலும் நின்ற மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் வில்லியம், கேட் திருமணம் புரட்டத்தாந்து முறைப்படி நடைபெற்றது. மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அப்போது மணி ஒலிக்கப்பட்டு, இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. மணமகனின் தோழராக வில்லியமின் தம்பி ஹாரி அவருடன் வந்தார். கேட்டுடன் அவரது சகோதரி மணப்பெண் தோழியாக உடனிருந்தார்.
திருமணச் சடங்கின் முடிவில் மணமக்கள் 4 குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்று அதன் மேல்மாடத்தில் இருந்து பொதுமக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியம்முக்கு "அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன்" என்று கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.
திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட கொண்டை ஊசியை இலங்கை அரசு சார்பில் வழங்கப்பட்டது. முன்னதாக 1981ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்திருந்தது. மை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை சுமார் 200 கோடி பேர் பார்த்தனர்.
நடுத்தர குடும்பத்தில் இருந்து... சுமார் 350 ஆண்டுகளுக்குப்பின் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை கேட் பெற்றார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், 40 நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினர், 1900 வெளிநாட்டுப் பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேர், கோர்டன் பிரவுன் ஆகியோருக்கு திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு ஆர்ப்பாட்டங்களும் அமைதியாக நடந்தன.
தொடர்புள்ள செய்திகள்
- வில்லியம் - கேத்தரின் மிடில்டன் திருமணம், ஏப்ரல் 28, 2011
மூலம்
- பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் திருமணம், பிபிசி தமிழ், ஏப்ரல் 29, 2011
- Kate and William become Duke and Duchess of Cambridge, பிபிசி, ஏப்ரல் 29, 2011