இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: ஆளும் கூட்டணி பெரு வெற்றி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, மார்ச்சு 19, 2011

இலங்கையில் கடந்த வியாழன் அன்று 234 உள்ளூராட்சி சபைகளுக்காக நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 9 சபைகளை மட்டுமே கைப்பற்றியது. தமிழர் பகுதிகளில் 14 இடங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 12 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.


வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு சபைகளையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் கைப்பற்றிக்கொண்டன.


மலையக மக்கள் முன்னணி நுவரெலியா பிரதேச சபையைக் கைப்பற்றியது. மற்றும் ஒரு முக்கிய எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. அது நீண்ட காலமாக தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த திசமகாராம பிரதேச சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.


ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி 33 இலட்சத்து 84 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 55.65வீதமாகும். ஐ.தே.க. 20 இலட்சத்து 32 ஆயிரம் வாக்குகளையும் தமிழரசுக் கட்சி 70 ஆயிரம் வாக்குகளையும் பெற்றன.


நாடு முழுவதிலும் 335 உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்ற போதிலும் 234 மன்றங்களுக்கான வாக்களிப்பே 7ஆயிரத்து 402 வாக்களிப்பு நிலையங்களில் வியாழனன்று இடம்பெற்றது. இவ்வாக்களிப்பில் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு