உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு

வெள்ளி, சனவரி 28, 2011

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இலங்கையின் 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி வடக்கு மாகாணத்தில் தனது அரசியல் செல்வாக்கைப் பலப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு இது பெரும் அடியாகக் கருதப்படுகிறது.


இதற்கிடையில் எதிர்வரும் மார்ச் 17 ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 4 மாநகர சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 258 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் 3931 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.


ஆளும் கட்சியின் பெயரில் “முன்னணி" என்பதற்கு பதிலாக “கூட்டமைப்பு" என எழுதப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான ஆளும் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்குச் சமர்ப்பித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 16 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 2 பிரதேச சபைகளுக்கான மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.


ஆளும் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட வேறு சில கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் உரிய நடைமுறைக்கு அமைய தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் அவைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக யாழ் தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியும் யாழ் அரசாங்க அதிபருமாகிய திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.


மொத்தமாக 600 சுயேச்சைக்குழுக்கள் இம்முறை கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதில் ஆகக்கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 156 சுயேச்சைக்குழுக்களும் இரண்டாவதாக களுத்துறை மாவட்டத்தில் 72 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.


மூலம்

தொகு

several others even before polls], தி ஐலண்ட், சனவரி 28, 2011