இலங்கை அகதி விண்ணப்பங்கள் தொடர்பான தடையை ஆஸ்திரேலியா உடனடியாக நீக்கியது

செவ்வாய், சூலை 6, 2010

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்ட், எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட் ஆகியோர் அகதிகள் தொடர்பான தத்தமது புதிய நிலைப்பாட்டை இன்று அறிவித்தனர்.


புதிய பிரதமர் ஜூலியா கிலார்ட்

அகதிகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் புதிய பிராந்திய நிலையம் ஒன்றை கிழக்குத் திமோரில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அந்நாட்டு அரசுடன் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கில்ர்ட் அறிவித்தார்.


இலங்கை அகதிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறித்தான இடைக்காலத் தடையை இன்றில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்தார். ஆனாலும், ஆப்கானித்தான் அகதிகளுக்கான தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவித்தார்.


இன்னும் இரு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்கள் இடம்பெறவிருக்கும் நிலையில், அகதிகள் பிரச்சினை இங்கு அரசியல் ரீதியாக சூடு பிடித்துள்ளது.


"அகதிகளைக் கடத்துவோர் இங்கு எதனையும் விற்க முடியாதென நாம் அவர்களுக்குத் தெரிய வைப்போம். படகு மூலம் வருவோர் உடனடியாக பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பப்படுவர்," என ஜூலியா கிலார்ட் இன்று பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்.


தாம் பதவிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் அகதிகளின் படகுகள் உடனடியாக திருப்பி அனுப்பப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபொட் தெரிவித்தார். அத்துடன் பசிபிக் நாடுகளான நவூரு மற்றும் பப்புவா நியூ கினி ஆகியவற்றில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


அகதிகளைக் கடத்துவோர் இங்கு எதனையும் விற்க முடியாதென நாம் அவர்களுக்குத் தெரிய வைப்போம்.

—பிரதமர் ஜூலியா கில்லார்ட்

ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் குடியமர்வதற்காக ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், அகதிகளின் தொகை மிகக் குறைவே (ஆக 1.6%) ஆயினும், சட்டவிரோதக் குடிவரவு இங்கு அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


சட்டவிரோத அகதிகளுக்கான புதிய கொள்கைகளை அறிவித்ததன் மூலம் ஜூலியா கிலார்ட் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தலின் சூட்டைக் குறைப்பதற்கு முயலுகின்றார் என அவர் தெரிவித்தார்.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு