இலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார்
வெள்ளி, சூன் 10, 2011
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், மற்றும் 20க்கு 20 போட்டிகளில் சனத் ஜயசூரியா பங்குகொள்ளவுள்ளார். தான் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியுடனான துடுப்பாட்ட சுற்றுப் பயணத்தோடு பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதியாக 2009 ஆம் ஆண்டு இந்திய அணியுடனான போட்டிகளில் பங்குபற்றினார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உப்புல் தரங்க மீது ஊக்கமருந்து உட்கொண்டமை தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சனத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் இவர் இம்மாதம் 30 ஆம் திகதி தனது 42 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார். 42 வயதாகும் சனத் ஜயசூரிய, தற்போது பன்னாட்டுப் போட்டிகளில் நீடித்திருக்கும் அதிக வயதான வீரராக உள்ளார்.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜயசூரிய, உலகக்கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படாதமை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துடனான போட்டிகளில் முடிந்தளவு சிறப்பாக விளையாடுவேன் எனவும், தான் 18 வயதில் இருந்ததைப் போல சிறந்த உடல் திட நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்தும் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக சோமச்சந்திர டி சில்வா 1985 ஆம் ஆண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றிய போது அவருக்கு வயது 42 வருடங்கள், 261 நாட்களாகும். இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவராக பதவி வகிக்கின்றார். மற்றொரு இலங்கையரான பிளே வியன் அபோன்சோ, 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணி சார்பில் தனது 43 ஆவது வயதில் (43 வருடங்கள், 129 நாட்கள்) விளையாடினார்.
மூலம்
தொகு- recalled to ODI and T20 squad, அததெரன, சூன் 9, 2011
- சனத் ஜயசூரிய மீண்டும் அணியில், தினகரன் சூன் 10, 2011
- Sanath Jayasuriya: Master-blaster's exciting last stand, பிபிசி, சூன் 10, 2011