இயற்கை உழவறிஞர் முனைவர் நம்மாழ்வார் இயற்கை எய்தினார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 31, 2013


தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை உழவறிஞர் முனைவர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.


கோ. நம்மாழ்வார் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற ஊரில், 1938 ஆம் ஆண்டு பிறந்தார். வேளாண் அறிவியலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண்மை ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்தார். வேதி உரங்கள், பூச்ச, பூஞ்சாணக்கொல்லிகளால் மண்ணிற்கும், பயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், இயற்கை உழவியல் ஏற்பட்ட முழு ஈடுபாட்டால் அரசு வேலையை விட்டொழித்து, இயற்கை வழி வேளாண்மையை தம் வாழ்நாள் பணியாகச் செய்தார். இவரின் வாழ்நாள் பணிகளைப் பாராட்டி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.


உழவில்லா வேளாண்மை, மருந்தில்லா மருத்துவம், கல்வியில்லா கல்வி (முறைசாரக்கல்வி) என்னும் மும்முழக்கத்தை தமிழ்நாட்டிற்கு அளித்தவர் இவர். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வாழ்நாளின் இறுதிவரை இயற்கை வேளாண்மைக்கும், உழவர் உரிமைக்கும் உழைத்த முனைவர் நம்மாழ்வாரின் இழப்பு ஈடுசெய்யவியலா பேரிழப்பு என தமிழகச் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோ. நம்மாழ்வார் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (31.12.2013) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தஞ்சாவூரிலுள்ள பாரத் கல்லூரியில் வைக்கப்படுகிறது. அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் நாளை (01.01.2014) கடவூரில் அமைந்துள்ள வானகத்தில் நடைபெறும் என்று 'வானகம்' நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்

தொகு
  1. தினத்தந்தி இணையச்செய்தி
  2. தினமணி இணையச்செய்தி
  3. தினமலர் இணையச்செய்தி
  4. வேளாண்மைத் தகவல் ஊடகச்செய்தி