இந்துகுஷ் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பாகிஸ்தான், டெல்லி, வடமாநிலங்களிலும் அதிர்வு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஏப்பிரல் 11, 2016

இந்துகுஷ் மலைப்பகுதியில், வடமேற்கு பாகிஸ்தான், ஆப்கான்-தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான், ஆப்கான் தலைநகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியிலும் இந்த நிலநடுக்க அலைகளால் அதிர்வு ஏற்பட்டதில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்.) தெரிவித்துள்ளது. இன்று மதியம் (10, 04, 2016) 03.58 மணியளவில் ஆப்கான் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 282 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 210கிமீ தொலைவில் இதன் மையம் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்க அலைகளின் தாக்கம் 200கிமீ பரப்புக்கு இருந்தது. டெல்லி, காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்க அலைகளின் தாக்கம் இருந்தது.

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை வழங்கிய நிலநடுக்கத்தின் அதிர்வுநிலப்படம் (இந்துகுஷ் மலைப்பகுதி)


பாகிஸ்தான் வானொலி நிலையச் செய்தியின் படி பெஷாவர், சித்ரல், ஸ்வாட், கில்ஜித், பைசலாபாத், லாகூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் வீடுகள், அலுவலகங்களை விட்டு பீதியில் வெளியேறிய மக்கள் சாலைகளிலேயே வழிபாடு செய்ததையும் பார்க்க முடிந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை (10, 04, 2016) உயிர்ச்சேத, பொருட்சேத விவரங்கள் எதுவுமில்லை.


இமாலயப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்காரணம், இந்திய, யுரேசிய கண்டத்தட்டுகள் மோதிக்கொள்ளும் இடமாகும் இது. யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியில் இந்திய கண்டத்தட்டு செலுத்தப்படும் ஒரு சக்தி வாய்ந்த நடவடிக்கையே பயங்கர நிலநடுக்கப் பகுதியாக இமாலயம் திகழ்வதற்குக் காரணமாக உள்ளது.


மூலம்

தொகு