இந்திய மற்போர் வீரரும் நடிகருமான தாரா சிங் 83வது அகவையில் காலமானார்

வியாழன், சூலை 12, 2012

பிரபல நடிகரும், மற்போர் வீரருமான தாரா சிங் இந்தியாவின் மும்பை நகர மருத்துவமனை ஒன்றில் இன்று காலமானார் என அவரது மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர்.


83 அகவையுள்ள தாரா சிங், 1960 ஆம் ஆண்டு உலக மற்போர்ப் பட்டத்தை வென்றவர். அதன் பின்னர் பல இந்தித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் அனுமானாக நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார்.


தாரா சிங் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். கிங் கொங், பௌலத், மேரா நாம் ஜோகர் உட்பட 140 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2007 ஆம் ஆண்டில் ஜப் வி மெட் என்ற படத்தில் கரீனா கபூரின் தாத்தாவாக நடித்தார்.


1928ம் ஆண்டு நவம்பர் 19 இல் அமிர்தரசரில் உள்ள தர்மூச கிராமத்தில் பிறந்தவர். பொதுநலவாயப் போட்டிகளில் மற்போரில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 500 க்கு மேற்பட்ட தடவை மல்யுத்த மோதல்களில் வெற்றி பெற்றுள்ளார்.


இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்படப் பலர் இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


மூலம் தொகு