இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் உயிரிழப்பு

வெள்ளி, சூன் 4, 2010

இங்கிலாந்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று கண்மூடித்தனமாக சுட்டு 12 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரியின் இறந்த உடல் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


இங்கிலாந்தில் கம்பிரியா கவுண்டியின் அமைவிடம்

பிரிட்டனின் மேற்கு கம்பிரியா பகுதியிலேயே நேற்று முன்தினம் புதன்கிழமை இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாடகைக் கார் சாரதியான டெரிக் பேர்ட் என்பவரே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கம்பிரியாவின் வைட்ஹாவன், சீஸ்கேல், எக்ரிமொண்ட் ஆகிய இடங்களில் மொத்தம் 30 வெவ்வேறு பகுதிகளில் குறித்த நபர் தனது வாகனத்தில் இருந்தவாறே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.


இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.


முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் நகரின் வெளிப்புறத்திற்கு சென்றுள்ளார்.


துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் துப்பாக்கிதாரியின் சகோதரர், வக்கீல், மற்றும் அவரது நண்பரான சக வாகனச் சாரதி ஒருவரும் அடங்குவர்.


இச் சம்பவம் குறித்த விசாரணைகளை பிரித்தானியக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்

தொகு