இங்கிலாந்தில் இந்திய மாணவன் படுகொலை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 27, 2011

இங்கிலாந்தின் சால்ஃபோர்ட் நகரில் 23 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று திங்கட்கிழமை அதிகாலை லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒன்பது சக இந்திய மாணவர்களுடன் நின்றிருந்த அனுஜ் பித்வி என்பவரை இரண்டு பேர் அணுகினர் எனவும், மிகக் குறுகிய நேர வாக்குவாதங்களை அடுத்து அவர்கள் அனுஜைச் சுட்டுக் கொன்றனர். இக்கொலை தொடர்பாக 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுட்டவர் ஒரு வெள்ளையர் எனவும் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கூறப்படுகிறது. அனுஜைச் சுட்டு விட்டு இருவரும் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிப்பதற்காக சக மாணவ மாணவியருடன் அருகில் இருந்த உணவு விடுதி ஒன்றில் அனுஜ் தங்கியிருந்தார். ஏனைய மாணவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பின்னர் அவர்களது பலகலைக்கழகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


மகாராட்டிராவின் புனே நகரைச் சேர்ந்த அனுஜின் பெற்றோருக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்த காவல்துறையினர் சகல கோணத்திலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.


மூலம்

தொகு