ஆஸ்திரேலியத் தேர்தல் 2010: ஜூலியா கிலார்ட் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றார்

செவ்வாய், செப்டம்பர் 7, 2010

இரண்டு முக்கிய சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதன் மூலம் ஜூலியா கிலார்ட் ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.


பிரதமர் ஜூலியா கிலார்ட்

நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று சுயேட்சை உறுப்பினர்கள் இன்று தமது இறுதி முடிவை அறிவித்தார்கள். டொனி வின்சர், ரொப் ஓக்‌ஷொட் ஆகியோர் கிலார்டின் தொழிற்கட்சிக்கும், பொப் காட்டர் எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட்டின் தாராளவாதக் கட்சிக்கும் ஆதரவைத் தெரிவித்தனர்.


தேர்தல் நடந்து முடிந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக யார் அரசமைப்பது என்பது குறித்து இழுபறி நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


இன்றைய அறிவிப்பின் மூலம் தொழிற்கட்சிக்கு 76 உறுப்பினர்களின் ஆதரவும், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 74 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.


இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஒரு சிறுபான்மை நாடாளுமன்றம் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்