ஆப்கானித்தானில் இருந்து டச்சுப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டனர்

செவ்வாய், ஆகத்து 3, 2010

நெதர்லாந்து தனது நான்கு ஆண்டு கால இராணுவ நடவடிக்கைகளை ஆப்கானித்தானில் முடித்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இச்செய்தியை நெதர்லாந்து வானொலி அறிவித்தது. மொத்தம் 1,950 டச்சு இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டிருந்தனர்.


தாம் பணியாற்றிய உருசுகான் மாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக டச்சு இராணுவத் தலைவர் ஜெனரல் பீட்டர் வான் ஊம் தெரிவித்தார். ஆனாலும் தமது படைவிலகலை அடுத்து “இன்னும் நிறைய நடைபெற வேண்டி உள்ளது” என அவர் ஒப்புக்கொண்டார்.


டச்சுப் படையினர் தமது இராணுவக் கடமைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சம்பிரதாய பூர்வமாக அமெரிக்க மற்றும் ஆத்திரேலிய இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.


நான்கு எஃப்16 ஜெட் விமானங்கள், மற்று ஐந்து அப்பாச்சி உலங்கு வானூர்திகள் ஆகியவை தொடர்ந்து இவ்வாண்டு இறுதி வரை ஆப்கானித்தானில் தங்கியிருக்கும் என டச்சு அரசு அறிவித்துள்ளது.


ஆப்கானித்தானியப் பணியில் இதுவரை 24 டச்சு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 140 பேர் காயமடைந்தனர். முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட கால எல்லைக்கும் மேலாக இன்னும் 12 மாதங்களுக்கு கடமையாற்றுமாறு நேட்டோ தலைமை விடுத்த வேண்டுகோளை நெதர்லாந்து நிராகரித்தது.


உருகுசான் மாகாணத்தில் டச்சு இராணுவத்தினர் மிக மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டது. இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. அரசில் இணைந்திருந்த கட்சியொன்று அரசைவிட்டு வெளியேறியது.


ஆப்கானித்தான் அரசுத்தலைவர் அமீத் அல் கர்சாயி டச்சு இராணுவம் நான்கு ஆண்டுகளாக முன்னெடுத்த கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானின் புனரமைப்புப்பணிகளில் நெதர்லாந்து பொறியியலாளர்கள் ஈடுபடுவதையும் பாராட்டினார்.


டச்சு இராணுவம் வெளியேறியதை தலிபான்கள் வரவேற்றனர். அத்துடன் ஏனைய நாடுகளின் படைகளும் விரைவாக வெளியேற வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


ஆப்கானித்தானில் கிட்டத்தட்ட 145,000 வெளிநாட்டுப் படையினர் அமெரிக்க, மற்றும் நேட்டோ தலைமையில் பணியாற்றுகின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு