ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்ச்சையை அடுத்து டச்சு அரசாங்கம் கலைப்பு

சனி, பெப்பிரவரி 20, 2010

ஆப்கானிஸ்தானுக்குப் படைகளை அனுப்பும் விவகாரத்தில் நெதர்லாந்தின் கூட்டணி அரசில் பிளவு ஏற்பட்டு அரசாங்கம் செயலிழந்தது.


அரசுக் கூட்டணிக் கட்சிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து தொழிற் கட்சி அரசில் இருந்து வெளியேறியுள்ளதாக கிருத்தவ மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜான் பீட்டர் பால்கெனெண்டெ அறிவித்தார்.


நேட்டோவின் வேண்டுகோளிற்கிணங்க 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் ஆப்கானிஸ்தானில் தமது படைகளை வைத்திருக்க திரு பால்கெனெண்டெ முடிவு செய்திருந்தார்.


ஆனால் அரசின் இரண்டாவது பெரிய கட்சியான தொழிற் கட்சி இந்நடவடிக்கையை எதிர்த்து வந்தது.


2006 ஆம் ஆண்டில் இருந்து தெற்கு ஆப்கானித்தானில் 2,000 வரையான டச்சுப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பல்வேறு படை நடவடிக்கைகளில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே ஒருதடவை படைகளைத் திருப்பி அழைக்கும் நாள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில் டச்சுப் படையினரைத் திரும்பப் பெறுவதாக இருந்தது. ஆனாலும் அவர்களுக்காகப் பிரதியிட வேறு நேட்டோப் படையினர் முன்வராததனால், ஆகஸ்ட் 2010 வரை அங்கு தங்கியிருப்பதற்கு நாடாளுமன்றம் ஒத்திருந்தது.

மூலம் தொகு