ஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது
சனி, நவம்பர் 6, 2010
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
ஆஸ்திரேலியாவில் தனது முதலாவது ஒருநாள் துடுப்பாட்டத் தொடரை இலங்கை அணி வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 29 ஓட்ட வேறுபாட்டில் ஆத்திரேலிய அணியை வென்றது.
நாள் முழுவதும் சிட்னியில் பெய்த பெரு மழையினால் ஆட்டம் 39 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் பெற்றது. டக்வோர்த் லூயிஸ் முறை மூலம் ஆத்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆத்திரேலிய அணி 210 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆத்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் ஆத்திரேலிய அணி ஒருநாள் போட்டிக்த் தொடரில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவாகும்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பிறிஸ்பேனில் நடைபெறவிருக்கிறது. அதன் பின்னர் ஆத்திரேலிய அணி நவம்பர் 25 இல் இங்கிலாத்துக்கெதிரான ஆஷசுத் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது.
நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 எல்லைகளையும், 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மகேல ஜயவர்தன 5 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது. 41.1 வது ஓவரில் மழை குறுக்கிட்டதை அடுத்து இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அதன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 எல்லைகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். சங்கக்கார 52 பந்துகளில் 4 எல்லைகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். முத்தையா முரளிதரன் இரண்டு ஆத்திரேலிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்ற புதன்கிழமை மெல்பேர்ண் நகரில் இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 9 ஆவது விக்கெட்டுக்கு மத்யூஸ்-மலிங்க சோடி 132 ஓட்டங்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. 240 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 25.2 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பாதையில் தத்தளித்தது. இந்தத் தருணத்தில் 9 ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த மத்யூஸ்-மலிங்க ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்று புதிய சாதனையும் படைத்தது.
இதற்கு முன் 1983 ஆம் ஆண்டில் உலகக்கிண்ணப்போட்டியில் சிம்பாப்வேக்கு எதிரான காலிறுதியில் இந்தியாவின் கபில்தேவ்-கிர்மானி சோடி 9 வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அவர்களின் 27 ஆண்டுகால சாதனை தகர்க்கப்பட்டது.
மூலம்
தொகு- Australia crash to seventh defeat, பிபிசி, நவம்பர் 5, 2010
- One Day International Series: Australia v Sri Lanka, பிபிசி, நவம்பர் 5, 2010
- அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி, தினகரன், நவம்பர் 6, 2010
- 27 ஆண்டுகால உலக சாதனையை தகர்த்த மத்யூஸ்மலிங்க ஜோடி, தினக்குரல், நவம்பர் 5, 2010