ஆத்திரேலியப் பெண்ணுக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது

சனி, மார்ச்சு 5, 2011

இந்தியத் தலைநகர் தில்லியில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதி ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து செயல் முடக்கம் அடைந்த ஆத்திரேலியப் பெண் ஒருவருக்கு இந்திய நீதிமன்றம் ஒன்று 49 மில்லியன் ரூபாய்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கியுள்ளது.


1978 ஆம் ஆண்டு மே மாதத்தில் சூசன் பியர் என்பவர் தில்லியில் உள்ள அக்பர் விடுதியில் அழுக்கடைந்த தரையில் சறுக்கி விழுந்து தலையிலும் முதுகுப் புறத்திலும் காயம் அடைந்தார். அக்பர் விடுதி இந்தியச் சுற்றுலா வளர்ச்சிப்பணி நிறுவனத்துக்குச் சொந்தமான அரசு விடுதியாகும்.


"இது எமக்கு மிக நீண்டதொரு போராட்டமாகவும், சலிப்படைந்ததாகவும் இருந்தது. இந்தத் தீர்ப்பினால் இப்போது எமக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது," என சூசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தியாவில் வழங்கப்பட்ட மிகப்பெரும் இழப்பீட்டுத் தொகை இதுவெனக் கருதப்படுகிறது.


குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பெண்கள் போலோ அணியின் உறுப்பினராக இருந்த சூசன் தனது 17வது வயதில் பெற்றோருடன் இந்தியாவில் சுற்றுலா சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்தது.


இந்தியச் சுற்றுலா வளர்ச்சிப்பணி நிறுவனம் இவ்விடுதியின் நீச்சல் தடாகத்தை சிறந்த முறையில் பராமரிக்க வில்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


இந்திய நீதிமன்றகளில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க மிக நீண்ட காலம் எடுக்கப்படுகிறது. 10 மில்லியன் வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


மூலம் தொகு