நீதிமன்ற அழைப்பாணையை அடுத்து பாக்கித்தான் பிரதமர் பதவி விலகத் தயாரென அறிவிப்பு

செவ்வாய், சனவரி 17, 2012

பாக்கித்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி நீதிமன்றத்தை அவமதித்ததாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. பாக்கித்தான் இராணுவத்திற்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையில் முறுகல் நிலவிவரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டன அறிக்கை அங்கு மேலும் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கிலானி பதவியில் இருந்து விலக முன்வந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.


பாக்கித்தான் சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்க தவறியதற்காகவே இந்தக் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி நேரில் நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்குமாறு பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.


பாக். சனாதிபதி சர்தாரி மீதான ஊழல் வழக்கு நேற்று 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. எனினும் இது தொடர்பான தகவல்களை அரசு நீதிமன்றத்திற்கு வழங்காதது மற்றும் நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டுகள் பிரதமர் கிலானி மீது சுமத்தப்பட்டது.


இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இதுபற்றி விளக்குவதாகவும், ஆளும் கூட்டணி கட்சியினரும் தனது பாக்கித்தான் மக்கள் கட்சி எம்.பி.க்களும் அதை ஏற்காவிட்டால் உடனடியாக பதவி விலகத் தயார் என்றும் கிலானி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1990களில் சுவிட்சர்லாந்து நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உட்பட அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்யும்படி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பிட்டிருந்தது. இந்தக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிரதமர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தின்படி சனாதிபதிக்கு எதிராக தமக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என பிரதமர் தரப்பில் கூறப்பட்டது.


இந்நிலையில் இந்த ஊழல் விவாகாரத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பாக்கித்தான் உச்ச நீதிமன்றம் ஆலோசித்துவருகிறது.


இதேநேரத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முழு ஆதரவு அளிக்கத் தயார் என்று முன்னாள் ராணுவ தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரப் நேற்று அறிவித்திருதார். லண்டனில் வசிக்கும் அவர் இந்த மாத இறுதியில் பாக்கித்தான் திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் ராணுவ புரட்சியை ஆதரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.


மூலம்

தொகு