அசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது

This is the stable version, checked on 19 அக்டோபர் 2013. 2 pending changes await review.

ஞாயிறு, ஏப்பிரல் 10, 2011

இத்தாலியில் உள்ள அசிசியின் புனித பிரான்சிசுவின் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை மீளப் புனரமைக்கப்பட்டுப் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.


புனித பிரான்சிசின் கல்லறை
புனித பிரான்சிசு

புனித பிரான்சிசு 13ம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டார். இவர் பின்னர் மிருகங்களின் புனிதராகவும், இத்தாலியின் புனிதராகவும் வழங்கப்பட்டு வருகிறார். இவர் தனது வாழ்வை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தவர். அசிசி நகரில் செல்வந்தரான ஒரு துணி வணிகருக்கு மகனாகப் பிறந்த பிரான்சிசு தனது செல்வந்த வாழ்க்கையை உதறி விட்டு ஏழை மக்களுக்காக வாழ ஆரம்பித்தார்.


இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். புரூசியாவுக்கு எதிராக, இத்தாலி போர் தொடுத்த போது, இவரும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த குரல் இவர் வாழ்வுப் பாதையை மாற்றியது. இவரது தந்தையின் கனவை பொய்ப்பித்து துறவறம் பூண்டார். 1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். 1212 இல் "கிளாரின் ஏழைகள்" என்ற பெண்கள் சபையையும், 1221 இல் போதுநிலையினரைக் கொண்டு மூன்றாம் சபையையும் ஆரம்பித்தார். 1226 இல் 44 வது வயதில் காலமானார். இரண்டே ஆண்டுகளில் திருத்தந்தை 9 ஆம் கிரகோரி இவரைப் புனிதராக்கினார்.


இவரது உடல் ஒரு செப்புப் பேழையில் வைக்கப்பட்டு அவரது பிறந்த ஊரிலேயே கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டது. இப்போது முதற்தடவையாக இக்கல்லறை புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக இதன் புனரமைப்பு வேலைகள் கட்டிட நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.


இவ்விழாவைக் கொண்டாடுவதற்கு உலகெங்கும் உள்ள பிரான்சிசுவின் பக்தர்கள் சிறப்பு ஆராதனைகளை நடத்தி வருகின்றனர்.


மூலம்

தொகு