அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், மார்ச்சு 14, 2013

புதிய திருத்தந்தையாக அர்ச்சென்டினாவைச் சேர்ந்த 76 அகவையுடைய கர்தினால் கோர்கே மரியோ பெர்கோலியோ தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை பிரான்சிசு என்ற பெயரில் இவர் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் 266 வது திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தும், அமெரிக்காக்களில் இருந்தும், இயேசு சபையில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது போப்பாண்டவரும் இவரே ஆவார்.


266வது திருத்தந்தை பிரான்சிசு

நேற்று புதன்கிழமை மாலை உரோம் நேரம் 7.05 மணிக்கு (இந்திய-இலங்கை நேரம் இரவு 11.35) வத்திக்கானின் சிசுட்டின் சிற்றாலயத்தின் புகைப் போக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளிவர ஆரம்பித்தது. இது கத்தோலிக்கத் திருஅவைக்கு புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை அங்கு கூடியிருந்த மக்களுக்கு உணர்த்தியது. வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கொட்டும் மழையில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெள்ளைப் புகையை வரவேற்றனர்.


நேற்றிரவு 8.12 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தில் தோன்றிய பிரான்சியக் கர்தினால் சான்-லூயி தவுரான் "மட்டற்ற மகிழ்ச்சியுடன் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். புதிய திருத்தந்தை ஒருவரை நாம் பெற்றுள்ளோம்" என்று இலத்தீன் மொழியில் அறிவித்தார்.


புதன்கிழமை அன்று ஆரம்பமான வாக்கெடுப்பில் 115 கர்தினால்கள் கலந்து கொண்டனர். நான்கு தடவைகள் நடந்த வாக்கெடுப்பில் எவரும் தெரிவாகவில்லை. ஐந்தாவது தடவையில் பிரான்சிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ச்சென்டினாவின் புவனெசு ஐரசு நகரில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஜோர்கே. இவரது தந்தை இரயில்வே துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலிய நாட்டவர். வேதியியலில் பட்டம் பெற்ற கோர்கே 1958ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். மெய்யியல், மற்றும் மனநலவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்று, புவனெசு ஐரெசுவில் டெல் சால்வடோர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.


1969ம் ஆண்டு குருநிலைப்படுத்தப்பட்டு, 1973ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை அர்ச்சென்டின இயேசு சபை மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். 1992இல் நகர உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவரை 2001 இல் கர்தினாலாக உயர்த்தினார். 2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் ஆசீர்வாதப்பர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோ 40 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தார் எனக் கூறப்படுகிறது.


திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் கடந்த மாதம் பதவியில் இருந்து விலகியிருந்தார். உடல்நலக் குறைவினால் தம்மால் இப்பணியை சிறப்பாக ஆற்ற முடியவில்லை எனக் கூறி அவர் பதவி விலகினார்.


கர்தினால் பெர்கோலியோ கருச்சிதைவு, ஓரினத் திருமணம், கருத்தடை ஆகியவை அறநெறிக்கு ஒவ்வாதவை என்று அழுத்தம் திருத்தமாகப் போதித்தவர். ஓரினத் தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுப்பது அக்குழந்தைகளுக்கு அநீதி இழைப்பதாகும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். இவருக்கும் ஆர்ஜன்டீனா அரசுக்கும் ஓரினத் திருமண விவகாரத்தில் பலத்த முரண்பாடுகள் இருந்துள்ளது, ஓரினச் சோர்க்கை தொடர்பான ஆர்ஜன்டீனா அரசின் கொள்கைகளை இவர் துணிந்து எதிர்த்துள்ளார். இவ்வாறு கருத்துத் தெரிவித்தற்காக அர்ஜென்டீனா நாட்டுத் தலைவர் கிறித்தீனா பெர்னாண்டசு கர்தினால் பெர்கோலியோவுக்கு வெளிப்படையான எதிர்ப்பினைக் காட்டினார்.


பேராயராக வாழ்ந்திருந்தாலும் சிறியதோர் வீட்டில் வாழ்ந்து, பேருந்திலும், தொடருந்துகளிலும் தனது பணிகளைச் செய்யச் சென்ற எளிமையே வடிவானவர் என உலக மக்களால் இவர் போற்றப்படுகிறார்.


மூலம்

தொகு