அகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம்

வெள்ளி, சூன் 3, 2011

பெற்றோர் இன்றி படகுகள் மூலம் ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டம் உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மலேசியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.


ஆட்களை அகதிகள் என்ற போர்வையில் ஆத்திரேலியாவுக்குள் கடத்துவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என அதன் குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்தார்.


"பெற்றோர் அல்லது பாதுகாவலர் இன்றி வரும் சிறுவர்கள் எமக்குத் தேவையில்லை," என அமைச்சர் தெரிவித்தார்.


ஆத்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் அகதிகளை அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக அவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது என்று இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாட்டின் படி அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 800 பேர் வரையில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர், மலேசியாவில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற, ஐ.நா. சபையின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தினால் அகதிகளாக ஏற்கப்பட்டுள்ள நான்காயிரம் பேரைப் பொறுப்பேற்க அவுஸ்திரேலியா இணங்கியுள்ளது.


எனினும், ஆத்திரேலிய அரசின் இத்திட்டத்துக்கு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாகப் பெண் பிள்ளைகள் பலர் கிறிஸ்துமசுத் தீவில் மலேசியாவுக்கு அனுப்பப்படுவதற்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


"அமைச்சர் இப்பிள்ளைகளுக்கு தானே பாதுகாவலராக உள்ளார் என்பதை மறந்து விட்டார்," என பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் சேரா ஹான்சன்-யங் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக ஆத்திரேலியாவின் யூனிசெஃப் நிறுவனத்தின் பணிப்பாளர் நோர்மன் கிலெஸ்பி தெரிவித்தார்.


கடந்த திசம்பரில், அகதிகளையும் குழந்தைகளையும் ஏற்றி வந்த படகொன்று கிறித்துமசுத் தீவுக் கரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு