படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, மே 8, 2011

ஆத்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் அகதிகளை அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக அவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது என்று இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.


அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 800 பேர் வரையில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என ஆத்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்தார். பதிலாக, மலேசியாவில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற, ஐ.நா. சபையின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தினால் அகதிகளாக ஏற்கப்பட்டுள்ள நான்காயிரம் பேரைப் பொறுப்பேற்க அவுஸ்திரேலியா இணங்கியுள்ளது.


இந்த ஒப்பந்தம் ஒரு திருப்புமுனையாக அமையும். ஆபத்தான கடற்பயணத்திற்கு படகு மூலம் ஆட்களை கடத்தும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இது ஒரு செய்தியாக அமையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆத்திரேலியக் கடற்பரப்பிற்கு வருபவர்கள் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவர் என்பதை இவ்விடயம் தெளிவாக உணர்த்தும் என்று ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


அயல் நாடுகளில் அகதிகளை அனுப்பி அங்கு அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் ஆத்திரேலிய அரசின் நடவடிக்கைகளை மனித உரிமைக் குழுக்கள் விமரிசித்தே வந்துள்ளன. முன்னால் பிரதமர் ஜோன் ஹவார்ட் தலைமையிலான அரசு பப்புவா நியூ கினி, மற்றும் நவூரு தீவிலும் இந்த நிலையங்களை அமைத்து மாதக் கணக்காக அகதிகளை அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காவலில் வைத்திருந்தது. கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த பிராந்திய நிலையங்களை 2008 இல் மூடியது. அங்கிருந்த அனைவரும் ஆத்திரேலியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.


இலங்கை, ஆப்கானித்தான், மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பெருந்தொகையானோர் ஆத்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் அண்மைக்காலங்களில் நுழைய முற்பட்டதை அடுத்து ஆத்திரேலியாவின் தடுப்புக் காவல் திட்டம் கட்யும் விமரிசினத்துக்குள்ளாகியது. கிறிஸ்துமஸ் தீவு, மற்றும் சிட்னியில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த சில மாதங்களாக கலவரங்கள் அதிகமாகியிருந்தது.


2010 ஆம் ஆண்டில் மட்டும் 6,000 பேர் அகதிகளாகப் படகுகளில் ஆத்திரேலியாவினுள் நுழைந்தனர்.


இதற்கிடையில், பப்புவா நியூ கினியில் மீண்டும் அகதிகள் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசுடன் ஆத்திரேலியா பேச்சுக்களில் இறங்கியுள்ளது.


மூலம்

தொகு