500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது
வெள்ளி, மே 28, 2010
- 28 மே 2015: இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது
- 28 திசம்பர் 2013: ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
- 31 அக்டோபர் 2013: ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு
- 31 சூலை 2013: இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு
- 22 பெப்பிரவரி 2013: இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவில் இராசகோபுரம் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்து தரை மட்டமானது. உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.
இந்தக் கோவில் கோபுரம் இடிந்து விழப் பல காரணங்கள் சொல்லப்பட்ட போதிலும் கோவில் கோபுரங்களில் வளர்ந்த ஆலமரச் செடிகளாலேயே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக அப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் இராசகோபுரம் 122 அடி உயரம் கொண்டது.
இந்தக் கோயில் 1516 ஆம் ஆண்டு விஜய நகரப் பேரரசின் கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் வாயுத் தலமாக விளங்குகிறது. கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். தென் கைலாசம் என்றும் இந்தக் கோயில் அழைக்கப்பட்டு வந்தது.
இதன் இராசகோபுரத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த இராஜகோபுரம் ரூ.15 இலட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது மீண்டும் இராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு அது விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது.
இந்தப் பிளவை அடுத்து, கோபுரத்தைச் சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கோபுரத்தை சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. இது குறித்து சென்னைப் பேராசிரியர் நரசிம்ம ராவ் கூறுகையில், "ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் இராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற இயற்கை பருவநிலை காரணமாக இராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையிலுள்ளது" என எச்சரித்திருந்தார்.
இந்நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு 08:05 மணியளவில் இராசகோபுரம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது.
இச்செய்தி அறிந்ததும் ஆந்திர மாநில முதல்வர் கே. ரோசையா "உடனடியாக அதே இடத்தில் புதிய இராசகோபுரம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு" அதிகாரிகளைப் பணித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்
தொகு- இடிந்து விழுந்தது ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம், தினமணி, மே 27, 2010
- 1516 இல் கட்டப்பட்ட ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ஆலய இராஜகோபுரம் இரண்டாக பிளந்தது, தினக்குரல், மே 26, 2010
- ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு, தட்ஸ்தமிழ், மே 27, 2010
- காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது, மே 27, 2010