இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு

வெள்ளி, பெப்பிரவரி 22, 2013

இந்தியாவின் தென் மாநில நகரான ஐதராபாதில் நேற்று இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 117 பேர் காயமடைந்தனர்.


நேற்று மாலை உள்ளூர் நேரம் 7:00 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாதில் பழங்கள் விற்பனை செய்யும் சந்தைப் பகுதி ஒன்றில் 150 மீற்றர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஈருருளிகளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் 10 நிமிட இடைவெளியில் வெடித்துள்ளன. இக்குண்டுவெடிப்புகளுக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை.


குண்டு வெடித்த இடத்துக்கு சென்று பார்வையிட்ட இந்திய உட்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே, ஐதராபாத் தாக்குதல் குறித்து குறிப்பாக எந்தப் புலனாய்வு எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.


மக்களை அமைதியாக இருக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 200,000 ரூபாய்கள் வழங்க அவர் உத்தரவிட்டார்.


இந்தியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையே மார்ச் 2 ஆம் நாள் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி இடம்பெறவிருக்கும் நிலையில், தமது அணியினரின் பாதுகாப்புக் குறித்து ஆத்திரேலியா இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தது. அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளும் இத்தாக்குதல் குறித்து தமது கவலைகளை வெளியிட்டுள்ளன.


18 மாதங்களுக்கு முன்னதாக தலைநகர் தில்லியில் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவில் நடந்த பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதல் இதுவாகும்.


மூலம் தொகு