2013 உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் தொடங்கியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஆகத்து 16, 2013

உத்தமம் என்ற பெயரில் இயங்கும் உலகத் தமிழ் தகவல், தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு, நேற்று வியாழக்கிழமை மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ என்னும் கருப்பொருளுடன் தொடங்கியது.


இந்த மாநாட்டை மலேசியத் தொடர்புத் துறை, பல்லூடக அமைச்சர் ஷாபரி சிக் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டின் செலவுகளுக்காக அமைச்சர் 50,000 ரிங்கிட் வழங்கப்படுவதாகவும் தமது உரையில் அறிவித்தார். இணைய வளர்ச்சிக்கும், பல் ஊடக தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கும் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார். உலகின் உயர்நிலை பல்கலைக்கழகங்களோடு இணைந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வரும் உத்தமம் அமைப்பை அமைச்சர் பாராட்டினார்.


உலகத்தமிழ் இணைய மாநாட்டு முகப்பில் இடப்பட்டிருந்த உத்தமம் அமைப்பின் முத்திரை

மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சுரைடா முகமட் டோன் வரவேற்புரை ஆற்றினார். தமதுரையில் இத்தகைய மாநாடுகளுக்கு மலாயாப் பல்கலைக் கழகம் எப்போதும் ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார். மலாயாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டான்ஸ்ரீ கவுத் ஜாஸ்மோன், மாநாட்டுத் தலைவரும், உத்தமம் அமைப்பின் நடப்புத் தலைவருமான சி.எம்.இளந்தமிழ், கான்பூரிலுள்ள இந்திய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


உத்தமம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், மாநாட்டின் கருப்பொருள் மீதான மையக் கருத்துரையை வழங்கினார். கணினி, இணையம் மற்றும் கைத்தொலைபேசி போன்ற கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்கு சிறப்பான முறையில் ஊடுருவி உள்ளது என்பது குறித்து அவர் திரைக்காட்சிகளுடன் விரிவாக எடுத்துரைத்தார்.


நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஏழு நாடுகளிலிருந்து வருகை தரும் ஏறத்தாழ 650 பேராளர்களும் பங்கேற்பாளர்களும் கலந்து கொள்வதோடு நூறு ஆய்வுக்கட்டுரைகள் பன்னாட்டுப் பேராளர்களால் படைக்கப்படவுள்ளது.


பொதுமக்கள் கலந்து கொள்ளும், பல்வேறு அமைப்புக்களின் அரங்குகளோடு கூடிய கண்காட்சியும் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும்.


மூலம்

தொகு