2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

வியாழன், ஏப்பிரல் 14, 2011

தமிழக சட்டசபைக்குநேற்று புதன்கிழமை வாக்குப்பதிவு வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 75 முதல் 80 சதவீதம் வரை வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களிடம் கூறினார். மூன்று வாக்குச்சாவடிகளில் மட்டும், 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக 54,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இடம்பெற்றது. 2.88 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியிலும், 1.20 லட்சம் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலில் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர்.


நேற்று இரவே வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு முகவர்கள் முன்னிலையில் முத்திரை இடப்பட்டன. அங்கும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். திருண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், கன்னியாகுமரி தொகுதியிலும் வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதாலும், நெய்வேலியில் 2 எந்திரத்தை சிலர் சேதப்படுத்தியதாலும் அங்கு வருகிற 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.


மூலம் தொகு