தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி

This is the stable version, checked on 14 சூலை 2011. Template changes await review.

வெள்ளி, மே 13, 2011

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி நடத்தும் அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. நாளை மறுநாள் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கவிருக்கிறார்.


அதிமுக பொதுச்செயலர் செல்வி ஜெயலலிதா

இதே வேளை, சட்டசபைத் தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனதும் மற்றும் அவரது அமைச்சரவையினதும் விலகல் கடிதத்தை இன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை தற்காலிக முதல்வராக இருக்குமாறு ஆளுநர் கருணாநிதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த காவல்துறை அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 15ம் தேதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ‌திமுக கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 31 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிமுக தனித்து 147 தொகுதிகளில் வென்றது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் தனியாக ஆட்சி அமைக்க 117 தொகுதிகள் மட்டுமே தேவை என்பதால், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.


திமுக அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, மைதீன்கான், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு உட்படப் பலர் தோல்வியடைந்தனர். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனும் தோற்றுள்ளார். மு. கருணாநிதி, திருவாரூர் தொகுதியிலும், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. வி. தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் 29,204 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இடம் தோல்வியடைந்தார்.


மூலம்