1982 குவாத்தமாலா படுகொலைகளுக்காக இராணுவ வீரருக்கு 6,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை

செவ்வாய், மார்ச்சு 13, 2012

குவாத்தமாலாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 201 பேர் படுகொலை செய்யப்பட்டமையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவத்தினர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மொத்தம் 6,060 ஆண்டுகள் சிறைந்த்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.


55 வயதான பெத்ரோ பிமாண்டெல் ரியோசு என்பவர் கடந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தார். 1982 ஆம் ஆண்டில் டொஸ் எரெசு என்ற கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்காக தண்டனை பெற்ற ஐந்தாவது முன்னாள் இராணுவ வீரர் இவராவார்.


36-ஆண்டுகால குவாத்தமாலாவின் இனப்போரில் டொஸ் எரெசு கிராமப் படுகொலைகளே மிகவும் உக்கிரமானதெனக் கருதப்படுகிறது. இடதுசாரி போராளிகளுக்கு ஆதரவு வழங்கியதற்காக கைபிலெசு என்ற குவாத்தமாலாவின் இராணுவப் பிரிவு இந்தக் கிராமத்தைத் தாக்கி மக்களைப் படுகொலை செய்தனர். மூன்று நாட்களாக இடம்பெற்ற தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ரியோசுக்கு ஒவ்வொரு படுகொலைக்கும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனித உரிமை மீறல்களுக்காக 30 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


பிமாண்டெல் ரியோசு கலிபோர்னியாவில் பல ஆண்டு காலம் வாழ்ந்த நிலையில் 2010 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.


குவாத்தமாலாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றதாகக் கருதப்படும் 1982-1983 காலப்பகுதியில் ஜெனரல் ரியோசு மொண்ட் நாட்டின் தலைவராக இருந்தார். இடதுசாரிப் போராளிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் உள்ளூர் மாயா இனத்தவர்கள் வாழும் கிராமங்கள் அழிக்கப்பட்டு அங்குள்ளோர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு சனவரியில் ரியோசு மொண்ட் மீது இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


1996 இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போது கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழந்துள்ளனர்.


மூலம் தொகு