குவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டு

வெள்ளி, சனவரி 27, 2012

குவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் எஃபிரெயின் ரியோசு மொண்ட் மீது இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


குவாத்தமாலாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றதாகக் கருதப்படும் 1982-1983 காலப்பகுதியில் ஜெனரல் ரியோசு மொண்ட், அகவை 85, நாட்டின் தலைவராக இருந்தார். இடதுசாரிப் போராளிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் உள்ளூர் மாயா இனத்தவர்கள் வாழும் கிராமங்கள் அழிகப்பட்டு அங்குள்ளோர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.


தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜெனரல் மொண்ட் மறுத்துள்ளார். ஆனாலும் அவரை வீட்டுக்காவலில் வைப்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


ஜெனரல் ரியோசு மொண்ட் 12 ஆண்டுகளுக்கு குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் சட்டவிலக்கு அளிக்கப்பட்டிருந்தார். இந்த சட்டவிலக்கு இம்மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.


1771 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கும், 29,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தமைக்கும் ஜெனரல் மொண்ட் காறமாக இருந்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் இருப்பதாக வழக்குத் தொடுநர்கள் கூறுகின்றனர். 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு சூன் மாதத்தில் ஜெனரல் மொண்டின் அரசில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த ஓய்வுபெற்ற ஜெனரல் எக்டர் மரியோ லோப்பசு பியுன்ரெசு என்பவர் இதே குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.


மூலம் தொகு