1977 இல் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமானக் கொலைகள் தொடர்பாக மூவர் கைது

புதன், மே 11, 2011

இராணுவ ஆட்சியின் போது அர்ஜென்டினாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 'வானூர்திக் கொலைகள்' தொடர்பாக மூன்று முன்னாள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


படிமம்:Léonie Duquet y Alice Domon fotografiadas en la ESMA .jpg
எஸ்மா என்ற சட்டவிரோதத் தடுப்பு முகாமில் லியோனி டூக்கே, அசுச்சீனா வில்லாஃபுலோர்

1977 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கன்னியாஸ்திரியான லியோனி டூக்கே, மற்றும் அசுச்சீனா வில்லாஃபுலோர் என்ற மனித உரிமை ஆர்வலர் மற்றும் பலர் விமானம் ஒன்றில் இருந்து தூக்கி எறியப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் பயணம் செய்த விமானத்தில் கைது செய்யப்பட்ட காவல்துறையினர் விமானப் பணியாளர்களாக இருந்துள்லதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இவ்வாறு எறியப்பட்டவர்களின் உடல்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் இனந்தெரியாத புதைகுழி ஒன்றில் புதைக்கப்பட்டனர். 2005 ஆம் ஆண்டிலேயே இவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இவ்வகையில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.


கடந்த செவ்வாய்க் கிழமை அர்ஜெண்டீன நீதிமன்றம் ஒன்று இந்தக் காவல்துறையினரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.


பிளாசா டி மாயோவின் அன்னைகள் என்ற மனித உரிமைகள் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் சகோதரி லியோனி டூக்கேயும் ஒருவர். இவரும் இவருடன் சேர்ந்த மேலும் பலரும் திசம்பர் 1977 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.


இவர்களுடன் கைதான அலீசு டொமோன் என்ற வேறொரு பிரெஞ்சுக் கன்னியாஸ்திரியின் உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.


இவர்களின் கடத்தல் மற்றும் படுகொலைகள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைக் கப்டன் ஆல்பிரெடோ அஸ்டிஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வழக்குத் தொடுநர்கள் கோரிக்கை விடுத்துள்லனர்.


1976 முதல் 1983 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற இராணுவ ஆட்சியில் 10,000 முதல் 30,000 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.


மூலம் தொகு