அர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், ஏப்பிரல் 21, 2010

30 ஆண்டுகளுக்கு முன்னால் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ரெனால்டோ பிக்னோனி என்ற அர்ஜென்டினாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளருக்கு 25 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


ஜெனரல் ரெனால்டோ பிக்னோனி (1980 இல்)

82 வயதான ஜெனரல் பிக்னோனி 1978-1979 காலப்பகுதியில் இரண்டாம் நிலை இராணுவத்தலைவராக இருந்த போது ஆட்கடத்தல் மற்றும் கொலைகள், சித்திரவதை போன்ற செயல்களுக்கு உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


புவனஸ் அயரெசில் இவரது வழக்கு முடிவடைந்த போது கொலை செய்யப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகளின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்னால் காணப்பட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் சப்தமிட்டனர்.


அதே காலப்பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மேலும் 6 அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன.


1982 முதல் 1983 வரை நாட்டின் தலைவராக இருந்த ஜெனரல் பிக்னோனி மீது மொத்தம் 56 நபர்களை சித்திரவதைக் கூடங்களில் அடைத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.


இவர் நாட்டுத் தலைவராக வருவதற்கு முன்னர் டி மேயோ என்ற சித்திரவதை முகாமின் தலைமை அதிகாரியாக இவர் பணியாற்றிய போதே இக்குற்றங்களை அவர் இழைத்திருந்தார்.


1983 ஆம் ஆண்டில் முடிவடைந்த ஏழாண்டு உள்நாட்டுப் போரின் போது இந்த டி மேயோ முகாம் நாட்டின் மிகப்பெரும் முகாமாக விளங்கியது.


"நீதி மிகவும் மந்தகதியிலேயே வந்துள்ளது, ஆனாலும் அது இறுதியாகக் கிடைத்துள்ளது," என மனித உரிமை ஆர்வலர் எஸ்டெல டி கார்லெட்டோ தெரிவித்தார்.


ஏழாண்டுப் போரில் மொத்தம் 30,000 பேர் வரை இறந்தோ அல்லது காணாமல் போயோ உள்ளனர். இடதுசாரி எதிர்ப்பாளர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

மூலம்

தொகு