1948 மலேசியப் படுகொலைகளை நேரில் பார்த்த கடைசி சாட்சி இறப்பு

செவ்வாய், ஏப்பிரல் 6, 2010


1948ம் ஆண்டில் மலேசியாவில் பிரித்தானியப் போர் வீரர்களால் பத்தாங் காலி என்னுமிடத்தில் 24 கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் கடைசி சாட்சி இறந்து விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


சென்ற வெள்ளிக்கிழமை அன்று இறந்த தாம் யொங் என்ற 78 வயது பெண் 1948 டிசம்பர் 12 இல் பட்டாங் காலி என்ற கிராமத்தில் ஸ்கொட்டியப் படைகள் உள்ளூர் கிராமவாசிகளைப் படுகொலை செய்ததைக் கண்டதாக அவரது குடும்பத்தினருக்காகப் பேசவல்ல குவெக் ஙீ மெங் என்பவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


பட்டாங் காலிப் படுகொலைகளில் நடந்தது என்ன என்பதை அறிந்த கடைசி சாட்சியும் இறந்து விட்டார்,” என அவர் தெரிவித்தார்.


மனித உரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைகள் குறித்து பல ஆண்டுகளாக பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அக்கோரிக்கையை சென்ற ஆகஸ்ட் மாதம் பிரித்தானியா நிராகரித்திருந்தது.


“தாம் யொங்கின் இறப்பை அடுத்து இது பற்றிய அதிகாரபூர்வ விசாரணை இனி நடைபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. ஆனாலும் சம்பவம் நடக்கும் போது எட்டு வயதாயிருந்த இன்னும் ஒரு நபர் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் அவரைக் கொண்டு இக்கோரிக்கையை நாம் மீளக் கொண்டுவர முயல்வோம்” என குவெக் தெரிவித்தார்.


இம்மாத இறுதியில் தமது குழுவின் வழக்கறிஞர்கள் பிரித்தானிய அதிகாரிகளுடன் வாதாட இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


கொல்லப்பட்ட 24 பேரும் 12 ஆண்டுகளாக அன்றைய மலேயாவில் போராடி வந்த கம்யூனிசப் போராளிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என பிரித்தானிய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


அன்றைய மலேய சட்டமா அதிபர் தமது படைகளின் செய்கையை நியாயப்படுத்தியிருந்தார். இந்நிகழ்வு 1970 ஆம் ஆண்டு வரையில் மறக்கப்பட்டிருந்தது. 1970 இல் பிரித்தானியப் பத்திரிகை ஒன்று இப்படுகொலைகள் குறித்து பிரித்தானிய படையினரின் வாக்குமூலங்களை வெளியிட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போராளிகள் அல்லவென்றும், அவர்கள் அனைவரும் கிராமவாசிகளே என்று செய்தி வெளியிட்டிருந்தது.


இதனை அடுத்து முழுமையான விசாரணை நடைபெறும் என பிரித்தானியா அறிவித்திருந்தும், பின்னர் ஆட்சி மாறிய அரசுகள் அதனைக் கவனிக்கத் தவறிவிட்டன.


2008 ஆம் ஆண்டில் தாம் ஜயொங் ஏஎஃப்பி நிறுவனத்துக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.

மூலம் தொகு