1919 அம்ரித்சர் படுகொலைகள்: பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்

புதன், பெப்பிரவரி 20, 2013

பிரித்தானிய வரலாற்றில் பெரும் இரத்தக்களரியை உண்டு பண்ணிய படுகொலைகளில் ஒன்றாகக் கருதப்படும் நிகழ்வை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்.


அம்ரித்சர் நகரில் ஜூலியன்வாலா பாக் படுகொலை நினைவுச் சின்னம்

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் கேமரன் தனது பயணத்தின் இறுதி நாளான இன்று பஞ்சாபின் அம்ரித்சர் நகருக்கு வந்திருந்தார். 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றில் பிரித்தானியப் படையினர் சரமாரியாகச் சுட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் எனக் கூறப்படுகிறது.


"பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு கறை படிந்த நிகழ்வு," என கேமரன் கூறினார். "இங்கு நடந்தவைகளை நாம் என்றுமே மறக்கக் கூடாது," எனத் தனது அஞ்சலிக் குறிப்பில் அவர் எழுதினார். ஆனாலும் அதற்காக அவர் முறையான மன்னிப்பு எதனையும் கேட்கவில்லை.


1919 படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என அன்றைய பிரித்தானிய அரசு கூறியிருந்தது. ஆனாலும் இத்தொகை 1,000 இற்கும் அதிகம் என இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது.


முன்னரும் பல பிரதமர்கள் தமது கவலைகளை வெளியிட்டிருந்தாலும், பணியில் இருக்கும் ஒரு பிரதமர் ஒருவர் நேரில் ஜாலியன்வாலா பாக் நினைவாலயத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது இதுவே முதற் தடவையாகும்.


மூலம் தொகு