வெனிசுவேலா விமான நிலையத்தில் 4 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்
சனி, மே 26, 2012
- 31 மார்ச்சு 2017: வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 7 திசம்பர் 2015: வெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது
- 16 பெப்பிரவரி 2014: வெனிசுவேலாவில் வன்முறைகளை அடக்க காவல்துறையினருக்கு அரசுத்தலைவர் உத்தரவு
- 29 திசம்பர் 2013: வெனிசுவேலாவில் அனைவருக்கும் வீடு
வெனிசுவேலா விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார் என வெனிசுவேலா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவரைப் பற்றிய தகவல்கள் சில வாரங்களுக்கு முன்னரே வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. ஆர்ஜெண்டீனிய இசைக்குழு ஒன்று இவரைப் பற்றிய தகவல்களை முதன் முதலில் யூடியூபில் வெளியிட்டது. இந்த இசைக்குழு உறுப்பினர்கள் சிமோன் பொலிவார் பன்னாட்டு விமான நிலையத்தில் 22வது கேட் அருகே இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த இந்த இளைஞரைக் கண்டு உரையாடிய போது இத்தகவல்கள் வெளிவந்தன. எசுப்பானிய மொழி முற்றாகத் தெரியாத நிலையில் ஆங்கிலமும் ஓரளவு மட்டுமே பேசக்கூடிய நிலையில் இவரிடம் இருந்து மிகக் குறைந்த அளவு தகவல்களையே பெற முடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரமேசுவரன் எனத் தனது பெயரை இந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
விமானநிலைய அதிகாரி ஒருவரின் தகவல்படி இந்த இளைஞரிடம் எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை எனவும், இதனால் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. வெனிசுவேலாவில் இலங்கைத் தூதரகம் இல்லாதமையால், இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பரமேசுவரன் முதலில் மெக்சிக்கோவுக்கு வந்திறங்கியதாகவும், பின்னர் அவர் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.
விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு சில உதவிகள் வழங்கியதாகவும், வெனிசுவேலாவின் குடிவரவுத் துறை அவருக்கு உணவு மற்றும் உறங்கப் படுக்கை ஆகியன வழங்கியிருந்தனர். ஆனாலும் விமான நிலையத்தை விட்டு வெளிவர அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் பரமேசுவரன் திடீரென விமான நிலையத்தில் காணப்படவில்லை என வெனிசுவேலா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் என்னவானார் என்பது குறித்து உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் சில கவலை வெளியிட்டுள்ளன.
மூலம்
தொகு- Stuck in Airport Limbo for Four Months in Venezuela, ஃபொக்சு நியூஸ், மே 17, 2012
- Man Bound to Venezuelan Airport for Four Months Without Documentation Disappears, தபிளேசு, மே 25, 2012